தலைமை ஆசிரியரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட பத்தாம் வகுப்பு மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியரை பத்தாம் வகுப்பு மாணவனே துரத்தி துரத்தி துப்பாக்கியால் சுட்ட வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் சக மாணவரிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட மாணவனை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூப்பிட்டு கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் நாட்டு துப்பாக்கி ஒன்றை எடுத்து வந்து தலைமை ஆசிரியரை துரத்தி துரத்தி சுட்டுள்ளான். அங்கிருந்தவர்கள் அம்மாணவனை பிடிக்க முற்பட்டபோது அவர்களை தாக்கிய அந்த மாணவன் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமை ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்ற மாணவனை தேடி வருகின்றனர்.