
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி இன்று (13.05.2025) காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து நன்பகல் 12.30 மணியளவில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தனித் தனியாக தண்டனை விவரங்கள் வாசிக்கப்பட்டது. அதில், “9 குற்றவாளிகளும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது குறித்து அ.தி.மு.க அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது. திமுகவைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அற்ப புத்தி எங்களுக்கு இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை; வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றினோம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அதிமுகவுக்கு பதில் கொடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அதில், 'சிபிஐ கேடயத்தை தூக்கி புனிதர் வேடத்தை தரிக்க எடப்பாடி பழனிசாமி முயல்கிறார். பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்று அதிமுக தன்னை தூய்மையானது போலக் காட்டுகிறது. பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவினருக்கு தொடர்பு இருக்கிறது என்றவுடன் அன்றைய அதிமுக மறைக்க முயன்றது. பெரும் போராட்டங்கள் நடந்த பின்னரும் இபிஎஸ் நடத்திய அரசு மூடி மறைக்க முயன்றது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார்'' எனத் தெரிவித்துள்ளார்.