
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்து வந்தது.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான முடிவுகளை எடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் உருவாகும் அபாயம் இருந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் உள்ளிட்ட முப்படைகள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில், 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் பொதுமக்கள் வெகுவாக ஈர்க்கப்பட்டு புதிதாக பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெயர் வைத்து தங்களது தேசபக்தியை காண்பிக்கின்றனர் பெற்றோர்கள். அந்த வகையில், ஒரே மருத்துவமனையில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்று பெற்றோர்கள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் குஷிநகர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆர்.கே.சாஹி தெரிவிக்கையில், “குஷிநகர் மருத்துவக் கல்லூரியில் மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களால் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தனது பெண் குழந்தைக்கு சிந்தூர் என்று பெயரிட்ட குஷிநகரைச் சேர்ந்த அர்ச்சனா ஷாஹி கூறுகையில், “பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, திருமணமான பல பெண்கள் தங்கள் கணவர்களை இழந்தபோது அவர்களின் வாழ்க்கை சீரழிந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது. இதைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். சிந்தூர் என்பது இப்போது ஒரு வார்த்தை அல்ல, ஒரு உணர்ச்சி. எனவே, எங்கள் மகளுக்கு சிந்தூர் என்று பெயரிட முடிவு செய்துள்ளோம்” என நெகிழ்ச்சியோடு பேசினார். இது போல், தனது குழந்தைக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர் வைத்த மற்ற பெற்றோர்களும் உணர்ச்சி பொங்கப் பேசினர்.