மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ட்ராக்டர் பேரணி, சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதில்லை என்ற முடிவில் மத்திய அரசு உறுதியாகவுள்ளது.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை வீடு திரும்பப் போவதில்லை என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்தநிலையில், போராட்டம் நடத்திவரும் விவசாயிகள், டெல்லி எல்லையில் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். இதுவரை தற்காலிக வீடுகள் அமைத்துத் தங்கியிருந்த விவசாயிகள், தற்போது சிங்கு எல்லையில் செங்கற்களைக் கொண்டு நிரந்தர வீடுகளைக் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும், வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் ஏ/சி வசதியும் ஏற்படுத்தித் தரவுள்ளனர்.
இதுகுறித்து, பாரதிய கிசான் யூனியன் (தோபா) அமைப்பின் தலைவர், வெப்பத்தை எதிர்கொள்வதற்காக விவசாயிகள், போராட்டம் நடத்தும் இடத்தில் வீடுகட்டி வருகிறார்கள். வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் வசதியாக ஏ/சி பொருத்துவோம். உள்ளூர் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர், உயர் அதிகாரிகளின் அழுத்தத்தைக் காரணம் காட்டி குண்ட்லியில் நடைபெறும் கட்டுமானத்தை நிறுத்த முயன்றார்" எனத் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் இந்தத் திடீர் நடவடிக்கையால் மத்திய அரசு அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.