வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கிட்டத்தட்ட ஓராண்டாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.
இந்தநிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அசாதுதீன் ஓவைசி, வேளாண் சட்டங்களைப் போலவே குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என கோரியுள்ளார். பொதுக்கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசி பேசியதாவது, “சிஏஏ மற்றும் என்.ஆர்.சி.யை வேளாண் சட்டங்களைப் போல திரும்பப் பெற வேண்டும். சிஏஏ அரசியலமைப்பிற்கு எதிரானது. அதை திரும்பப் பெறாவிட்டால், நாங்கள் தெருவுக்கு வந்து போராடுவோம். இங்கு இன்னொரு ஷாஹீன் பாக் ஏற்படும்.
பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் அரசியலில் இருப்பதற்குப் பதிலாக சினிமாவில் இருந்திருக்க வேண்டும். மோடி பாலிவுட்டில் இருந்திருந்தால் அனைத்து விருதுகளையும் அவரே வென்றிருப்பார். பிரதமரும், கிட்டத்தட்ட அனைத்து பாஜக தலைவர்களும் போராட்டக்காரர்களைத் துரோகிகள் என்றும், அவர்களைப் பயங்கரவாதிகள் என்றும் கூறினர். தற்போது உத்தரப்பிரதேசத்திலும் சில மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நெருங்கிவருவாதால், பிரதமர் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கிறார்.
விவசாயிகளின் போராட்டம் பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவருகிறது. அதனால் வரும் தேர்தலில் ஏற்படப்போகும் பாதிப்பை அவர் உணர்ந்துவிட்டார். இதுவே வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம். பிராமணர்களின் வாக்குகளை இழக்கச் செய்யும் என்பதால் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர்சாதி ஓட்டுகளை இழக்க பாஜக விரும்பவில்லை. அதனால்தான் அஜய் மிஸ்ரா இன்னும் அமைச்சரவையில் இருக்கிறார்.”
இவ்வாறு அசாதுதீன் ஓவைசி பேசினார்.