நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் நேற்று ஏழு மாநிலங்களில் 51 மக்களவை தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்டத்தேர்தல் நடைபெற்றது. இதில் நேற்று தேர்தல் நடைபெற்ற பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் பகுதியில், ஒரு தனியார் தாங்கும் விடுதியில் வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகை சீட்டு இயந்திரம், கட்டுப்பட்டு கருவிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முசாபர்பூரில் ஒரு ஓட்டலில் இருந்து 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, 2 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவை துணை ஆட்சியரால் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து அங்கிருந்த தேர்தல் அலுவலரான அவதேஷ் குமாரிடம் துணை ஆட்சியர் விசாரித்த போது, அவை அனைத்தும் பழுதான மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு பதிலாக பயன்படுத்துவதற்கான மாற்று எந்திரங்கள் மற்றும் கருவிகள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவரது ஓட்டுநர் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றுள்ளதால் இயந்திரங்களுடன் தான் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அங்கு உள்ளூர்வாசிகள் திரண்டு, மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றிருப்பதாகக் கூறி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முசாபர்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.