கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். அதன்படி, ஆளும் பா.ஜ.க. 20 சட்டப்பேரவைத் தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளையும், ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளையும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளையும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சேர்த்து 5 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, கட்சியின் கோவா தேர்தல் பொறுப்பாளர்கள் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சி.டி.ரவி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தலைமையில், கோவாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (10/03/2022) நடைபெற்றது.
சாங்குலிம் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட கோவா மாநில முதலமைச்சரான பிரமோத் சாவந்த் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பிரமோத் சாவந்த், "கோவாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்" எனத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசத்தல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.