வெளிநாட்டில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று (16/09/2022) வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்ப உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை அவரே நியமிக்க வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் எழுந்துள்ளன.
ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு தற்போது கேரளாவில் இருக்கிறார். இந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவர் நாடு திரும்பிய பின், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தலை நடத்தாமல், அவரே ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கட்சியின் முக்கிய தலைவர்கள் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி எம்.பி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட முன் வராவிட்டால், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கட்சியின் தலைவர் பதவிக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் வந்தால், அடுத்தாண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு இளம் தலைவரான சச்சின் பைலட் முதலமைச்சராக வாய்ப்பு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க தயங்கினால், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தர பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தெரிகிறது. பதவியை ஏற்க அசோக் கெலாட் மறுத்தால் முகுல் வாஸ்னிக் எம்.பி. காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சார்பில் சோனியா காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் (அல்லது) புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கேரளா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், இதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.