கடந்தாண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அதிக இடங்களை பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியால் கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் வந்த நிலையில், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, கடந்தாண்டு டிசம்பர் 5ஆம் தேதி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தேவேநந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார்.
இதையடுத்து, மகாயுதி கூட்டணி கட்சித் தலைவர்களான, சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். அதனை தொடர்ந்து, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தலைமையிலான புதிய அமைச்சரவையில், 33 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 6 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், சிவசேனா தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க மீது அதிருப்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. தலைமை பதவி மறுக்கப்பட்டதால் ஏக்நாத் ஷிண்டே, அதிருப்தி இருப்பதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாகவும் வரும் தகவலால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் வீட்டிவசதித் துறை தொடர்பான திட்டம் உள்பட முக்கியமான திட்டங்கள் குறித்து விவாதிக்க, கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அழைப்பு விடுத்தார். ஆனால், இந்த கூட்டத்திற்கு, ஏக்நாத் ஷிண்டே பங்கேற்கவில்லை. அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக சிவசேனாவைச் சேர்ந்த இணை அமைச்ச யோகேஷ் கதம் கலந்து கொண்டார்.
ஏக்நாத் ஷிண்டேவின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உடல்நிலை சரியல்லாமல் இருந்ததால் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும், ஏக்நாத் ஷிண்டேவுக்கும் தேவேந்திர பட்னாவிஸுக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை இல்லை என்றும் சிவசேனா எம்.பி நரேஷ் மாஸ்கே தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.