Skip to main content

லக்கிம்பூர் வன்முறை: பல்வேறு இடங்களில் போராட்டம் - பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுத்த உபி அரசு!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

delhi

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்திரப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

 

இந்தநிலையில் நேற்று (03.10.2021) உத்தரப்பிரதேசத்திற்கு வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆஷிஸ் மிஸ்ரா, விவசாயி ஒருவரை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாவட்டத்தில் இணைய சேவை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. சாஷாஸ்திர சீமா பால் படையினரும், மத்திய அதிவிரைவு படையினரும் வரும் ஆறாம் தேதிவரை லக்கிம்பூர் மாவட்டத்தில் குவிக்கப்பட்டிருப்பார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

மேலும், மத்திய உள்துறை இணையமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்துள்ளது. சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாதல், பஞ்சாப் மாநில துணை முதலமைச்சர் சுகிந்தர் ரன்தவா ஆகியோர் லக்னோ விமான நிலையம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூருக்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச முன்னாள் பிரதமர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்தநிலையில், லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹரியானாவின் அம்பாலாவில் லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து விவசாயிகள் பேரணி நடத்தினர். அதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹரிஷ் ராவத் தலைமையில் லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் டேராடூனில் போராட்டம் நடத்தினர். அதேபோல் லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்து சண்டிகரில் உள்ள ஆளுநர் இல்லம் முன் போராட்டம் நடத்திய நவ்ஜோத் சிங் சித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அதேபோல் டெல்லியுள்ள உ.பி. பவன் முன்பு மகளிர் காங்கிரஸ், அகில இந்திய கிசான் சபா மற்றும் அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பஞ்சாப் முதல்வர், லக்கிம்பூர் சென்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல திட்டமிட்டார். இதற்காக தங்கள் முதல்வரின் ஹெலிகாப்டரை லக்கிம்பூரில் தரையிறக்க பஞ்சாப் அரசு, உத்தரப்பிரதேச அரசிடம் அனுமதி கேட்டது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், லக்கிம்பூர் வர பஞ்சாப் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் அனுமதி தர முடியாது என உத்தரப்பிரதேச அரசு பஞ்சாப் முதல்வரின் வருகைக்கு அனுமதி மறுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்