மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகம், பேருந்து நிலையங்கள், விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் விவசாயிகள் போராடும் பகுதிகளிலும், டெல்லியின் எல்லை பகுதிகளிலும் இணைய தள சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் துண்டித்துள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் கூறுகின்றன.