அமெரிக்க அதிபர் டிரம்ப் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சூழலில், அங்கு நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் டெல்லியில் இன்று நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி போலீஸார் வன்முறையை கலைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிஏஏ எதிர்ப்பு மற்றும் சிஏஏ ஆதரவாளர்களுக்கு இடையேயும் வடகிழக்கு டெல்லியில் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதேபோல யமுனா விஹார் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரம்ப் சுற்றுப்பயணம் செய்ய உள்ள சூழலில் இந்த வன்முறையில் காவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள சூழலில், டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.