நடந்து முடிந்த டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. மேலும் பாஜக கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் மூன்றாவது முறையாக டெல்லி மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை 10.00 மணிக்கு பதவியேற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அம்மாநில ஆளுநர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
கடந்த ஆட்சியில் டெல்லி மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா மீண்டும் துணை முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் பிற அமைச்சர்களான சத்தேந்திர ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோரும் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்க இருக்கின்றனர்.
பதவியேற்பு விழாவில் டெல்லி பாஜக எம்.எல்.ஏக்கள், பாஜக எம்.பிக்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி மாநில மக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் வைரலான ஆவியன் டொமார் என்ற குழந்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில் டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ராம்லீலா மைதானம் முழுவதும் துணை ராணுவ படையினர், டெல்லி போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.