மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23 ஆம் தேதி, தேசிய பணமாக்கல் (national monetization pipeline) திட்டத்தை முறைப்படி ஆரம்பித்துவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் குறைவாகப் பயன்படுத்தப்படும் அரசு சொத்துகள், குத்தகைக்கு விடப்படவுள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் போன்றவற்றைக் குத்தகைக்கு விடுவதும் அடங்கும்.
இவ்வாறு அரசு சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் திரட்டப்படும் 6 லட்சம் கோடியை, உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேநிறத்தில் இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு ஊழல் என்றும் பகல்கொள்ளை எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளதோடு மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ப.சிதம்பரம் எழுப்பியுள்ள கேள்விகள் வருமாறு;
பணமாக்கலுக்கு எந்த வரைமுறையின் கீழ் சொத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன? சாலைகளுக்கும், ரயில்வே துறைக்கும் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரி உள்ளது. அதற்கும் தற்போது முன்மொழியப்பட்டுள்ள பணமாக்கலுக்கும் என வித்தியாசம்? சொத்துக்கள் 50 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்படுகிறது என்றால், காலப்போக்கில் அதன் மதிப்பு குறைந்து, சொத்து திரும்ப வருகையில் மதிப்பற்றதாக ஆகிவிடாதா?
சொத்துக்களைக் குத்தகைக்கு எடுத்தவர், சொத்துக்களை பறித்துக்கொள்ளமல் இருக்க விதிமுறைகள் உள்ளதா? ரயில்வே மூலோபாய துறையாகக் கருதப்படாது என மோடி அரசு முடிவெடுத்துவிட்டதா? பணமாக்கல் திட்டத்தில் ஏகாதிபத்தியத்தை,இரு நபர் ஆதிக்கத்தைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
தற்போது குத்தகைக்குவிடப்பட்டுள்ள சொத்துகள் மூலம் ரூ.1.30 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. தனியாருக்கு விற்றால் ரூ.1.50 லட்சம் கோடி கிடைக்கும். ஆக, அரசுக்குக் கூடுதலாக கிடைப்பது ரூ.20 லட்சம் கோடிதானே. இதற்காக 70 ஆண்டுகளாகக் கட்டமைத்த நிறுவனங்களை விற்கிறீர்கள். இது பகல் கொள்ளை. தேசிய பணமாக்கல் திட்டத்தின் நோக்கங்கள் என்ன, 4 ஆண்டுகளில் வருவாயைப் பெருக்குவதுதான் மட்டும்தான் நோக்கமா?
இவ்வாறு கேள்விகளை எழுப்பி மத்திய அரசை ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.