உலகை ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கெதிராக, பல்வேறு தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதில் பல்வேறு நாடுகள் 12 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கிவிட்டன. அதேநேரத்தில் இந்தியாவில், 18 வயதுக்கு குறைந்தவர்கள் மீது கரோனா தடுப்பூசி பரிசோதனை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும், 6 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் டெல்லி எய்ம்ஸில் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு டோஸ் மட்டும் ஏற்கனவே செலுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வந்ததாகவும், அடுத்தவாரம் முதல் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தபட்டு சோதனை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுவரை இந்தியாவில், ஸைடஸ் காடிலா நிறுவனம் மட்டுமே ஏற்கனவே தனது தடுப்பூசியை 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் மீது பரிசோதித்து தரவுகளை சமர்ப்பித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு அனுமதியளிப்பது குறித்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் பரிசீலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.