
இந்தி திணிப்புக்கு எதிராக தனது உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் மும்பையில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவர் மராத்தி மொழி பேச தெரியாது என்று சொன்னதால், நவநிர்மாண் சேனா கட்சியினர் அவரின் கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினர். அதே போல், வங்கி பணப்பரிவர்த்தனைகளில் மராத்தி மொழி பயன்படுத்தாததால் வங்கி ஊழியர் ஒருவர் மீது, நவநிர்மண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில், மராத்தி பேசாததால் பீட்சா டெலிவரி ஊழியருக்கு பணம் தர மறுத்து இளம்தம்பதி ஒன்று வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் டோமினோஸ் பீட்சா நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வரும் ரோஹித் லாவரே, கடந்த 12ஆம் தேதி இரவு பாண்டுப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் வசிக்கும் தம்பதிக்கு பீட்சா டெலிவரி செய்யும் போது மராத்தி பேசாததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பீட்சா டெலிவரி ஊழியரான ரோஹித், தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில், மராத்தியில் பேச வேண்டிய கட்டாயம் உள்ளதா? என்று ரோஹித் கேட்க அதற்கு ‘ஆம் இங்கே இப்படித்தான்’ என்று தம்பதி பதிலளித்தனர். அதன் பின்னர் ரோஹித், ‘இதை யார் சொன்னது?, அப்படி இருந்திருந்தால், நீங்கள் ஆர்டர் செய்திருக்கக் கூடாது. நீங்கள் பணம் செலுத்த விரும்பவில்லையா?’ என்று கேட்டார். இவர்களுக்கு வாக்குவாதம் அதிகரித்த நிலையில், அந்த பெண்ணுடன் இருந்த ஒரு நபர், கதவை மூட முயன்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தலங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.