பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள மஜித்தா உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 21 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் வீடு வீடாகச் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 10 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பஞ்சாப் எதிர்க்கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரதாப் சிங் பஜ்வா நேற்று (13.05.2025) அமிர்தசரஸில் உள்ள மராரி கலான் கிராமத்தில் உள்ள குருத்துவாராவில் கள்ளச்சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் கள்ளச்சாராய விவகாரம் குறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் கூறுகையில், “போதைப்பொருள் பற்றிய உண்மை இன்று அம்பலமாகியுள்ளது. போதைப்பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கிய பிறகு, பஞ்சாபில் முற்றிலும் போதைப்பொருட்களிலிருந்து விடுபட்டுள்ளது என்று முதல்வர் பகவந்த் மான் கூறியிருந்தார். ஆனால் எனது ஆதாரங்களின்படி, மஜிதாவில் கள்ளச்சாராயம் உட்கொண்டதால் இன்று பலர் இறந்துள்ளனர். இந்த சட்டவிரோத மதுபான வியாபாரம் காவல்துறையின் துணையுடன் வெளிப்படையாக நடந்து வருகிறது. இது முதல் சம்பவம் அல்ல. இது போன்ற சம்பவம்சங்ரூர் உட்படப் பலவேறு இடங்களில் இதற்கு முன்பு நடந்துள்ளன” எனத் தெரிவித்தார்.