இன்று நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மீதமுள்ள நிலையில் பல மாநிலங்களில் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, "ராகுல் காந்தியின் தந்தை நேர்மையானவர், மிஸ்டர் கிளீன் என காங்கிரசால் சித்தரிக்கப்பட்டதாகவும், ஆனால் கடைசியில் அவரது வாழ்க்கை நம்பர்-1 ஊழல்வாதியாகத்தான் முடிவடைந்தது" என கூறினார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரின் இந்த பேச்சு நாடு முழுவதும் பல்வேறு தரப்புகளில் எதிர்ப்பலைகளை கிளப்பியது. இந்தியாவின் முன்னாள் பிரதமர், பல நலத்திட்டங்களை கொண்டுவந்தவர். அவர் மீது இப்படியொரு விமர்சனம் வைப்பது தவறு என கருத்துக்கள் எழுந்தன.
இந்நிலையில், மோடி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது. 1980ல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் ராஜிவ்காந்தி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனாலும், ராஜிவ்காந்தி ஊழல் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை, என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே எந்தவிதமான ஆதாரங்களும் இன்றி மோடி இப்படி பேசியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.