
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலை நடத்தியது, பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பு என்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் அபாயம் இருந்தது.
இந்த வேளையில், ஏப்ரல் 23ஆம் தேதி எல்லை மீறி நுழைந்ததாகக் கூறி ராணுவ வீரர் ஒருவரை, பாகிஸ்தான் சிறைப்பிடித்தது. 182வது பட்டாலியனைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு வீரர் பூர்ணம் குமார் ஷா, பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் அருகே துப்பாக்கியை ஏந்தி பணியில் இருந்தார். அப்போது, தற்செயலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார். இதனையடுத்து, அவரை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கடந்த 7ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை நடத்தியது. இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா, 20 நாட்களுக்குப் பிறகு இன்று (14-05-25) காலை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அமிர்தசரஸின் அட்டாரி வழியாக காலை 10:30 மணியளவில் பூர்ணம் குமாரை பாகிஸ்தான் ஒப்படைத்தது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பூர்ணம் குமார் ஷாவிடம், தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று காலை 10:30 மணிக்கு அட்டாரி - வாகா எல்லையில் பூர்ணம் குமார் ஷா பாகிஸ்தானில் இருந்து எல்லைப் பாதுகாப்பு படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். வீரர் பூர்ணம் குமார் ஷா, கடந்த 23ஆம் தேதியன்று ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் பணியில் இருந்த போது தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததால் பாகிஸ்தான் ராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டார்’ எனத் தெரிவித்துள்ளது.