Skip to main content

“அ.தி.மு.க. செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு” - இ.பி.எஸ். சாடல்!

Published on 14/05/2025 | Edited on 14/05/2025

 

EPS says CM mk stalin is upset that ADMK has done this

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி நேற்று (13.05.2025) தீர்ப்பளித்தார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இத்தகைய சூழலில் தான் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (14.05.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் இது தொடர்பாக பேசுகையில், “நான் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது, அதாவது அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்று தெளிவாக சொல்லிருக்கிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உறுதியாக எப்படிப்பட்ட பெரிய பொறுப்பில் இருந்தாலும், செல்வாக்கு பெற்றிருந்தாலும் குற்றவாளிகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று சொன்னேன். அது நடந்திருக்கு. அதனால் தான் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட நான் பேசும்போது, ‘பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ என்று சொல்லிருந்தேன். அதுதான் நடந்திருக்கு.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கும் நடந்துகொண்டு இருக்கிறது. அதுவும் இதுமாதிரி உரியத் தண்டனை வழங்கப்படும். ஆனால் உடனே எடப்பாடி பழனிசாமி தான் தான் இதற்கு காரணம்னு சொல்லிட்டு இருக்காரு. அவர் அமித்ஷாவை பாத்துட்டு வந்தார். ஏன் பார்த்துவிட்டு வந்தாரென்று நாட்டுக்கே தெரியும். ஆனால் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி வழங்கக்கோரி நான் தான் சொல்லிவிட்டு வந்தேன், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு  நான் தான் சொல்லிவிட்டு வந்தேன் என்று சொன்னார். இந்த மாதிரி பொய் சொல்வது தான் பழனிசாமியின் வேலையாக உள்ளது. இது பற்றி மக்களுக்கு நல்லா தெரியும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், சி.பி.ஐ.க்கு மாற்றியதும் அதிமுக அரசு; விசாரித்தது சி.பி.ஐ; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். இதில் மாநில திமுக அரசுக்கோ, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்?. இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி.

EPS says CM mk stalin is upset that ADMK has done this

கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அதிமுக அரசு. கொடும் குற்றம் புரிந்த கேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர். ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர். வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?. தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா?. இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது.

அதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2ஆம் கட்டம் ஆகியவற்றிற்கான  நிதியை விடுவித்தது என்பதை மோசடியான (Humbug), பித்தலாட்டம் என்று புலம்புகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய மோசடி (Humbug). ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் அதிமுக.

EPS says CM mk stalin is upset that ADMK has done this

நான் எப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன். அது என்னுடைய மாநில உணர்வு. மறந்திருந்தால், டெல்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள். இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறி தான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்டவேண்டாம்.  இத்தனை நாட்கள் “என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?” என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது தானே ஓ.சி. (OG) பித்தலாட்டம்?. மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026இல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்