இந்தியாவில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் சத்தீஸ்கரின் மாநிலத்தின் கவுரேலா பேந்த்ரா மார்வாஹி மாவட்டத்தின் பழங்குடி நலத்துறை பணியாளர்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவிட்டால் ஊதியம் நிறுத்திவைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது அந்த பணியாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் பணியாளர்கள் தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் அடையாள சான்றின் நகலையும் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை பிறப்பித்துள்ள கவுரேலா பேந்த்ரா மார்வாஹி மாவட்டத்தின் பழங்குடி நலத்துறை துணை ஆணையர் கே.எஸ்.மாஸ்ராம், பணியாளர்களை பயமுறுத்த வேண்டும் என்பது தனது நோக்கமல்ல என்றும், துறை பணியாளர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே தனது நோக்கம் என கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்தியா உட்பட எந்த நாட்டிலும் கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படவில்லை. அதேநேரத்தில் பல்வேறு நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினரை மட்டுமே தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க முடிவெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.