அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி நேற்று விலகினார். அதற்கான கடிதத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ராகுலின் அறிவிப்பால் நாடு முழுவதும் தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை கால தாமதம் செய்யாமல், உடனடியாக நியமிக்க காங்கிரஸ் கட்சி தலைமையை கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
இவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இரண்டு முறை மத்திய பிரதேச மாநில முதல்வராக இருந்துள்ளார். இவருக்கு வயது 90 ஆகும். ஆனால் கட்சியின் இடைக்கால தலைவராக யாரையும் நியமிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கட்சியின் தலைவர் யார்? என்று தெரியாமல் தொண்டர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும் சில மாநில நிர்வாகிகள் டெல்லி சென்று ராகுலிடம் ஆலோசனை செய்யவுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதால், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் குறித்த அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.