உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என அரசியல் தலைமை குழு (பொலிட் பீரோ) அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி சசி தரூர் ராமர் கோவில் திறப்பு விழா குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘பிரதமர் மோடி ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலையும், பிப்ரவரி 14ஆம் தேதி அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலையும் திறக்க உள்ளார். அதன் பிறகு, விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன். எனவே, விஷயம் தெளிவாக உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டில் மோடி இந்திய வாக்காளர்களுக்கு பொருளாதார வளர்ச்சியின் அவதாரமாகவும், குஜராத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் காட்சிப்படுத்தப்பட்டார். அவர் அனைத்து இந்தியர்களுக்கும் வளர்ச்சியைக் கொண்டு வருவார் என்று கூறப்பட்டது.
ஆனால், 2019 ஆம் ஆண்டில், பணமதிப்பிழப்பு என்னும் பேரழிவுகரமான நடவடிக்கைக்குப் பிறகு அந்தக் கதை சரிந்த நிலையில், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், மோடிக்கு பொதுத் தேர்தலை தேசிய பாதுகாப்புத் தேர்தலாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியது. அடுத்ததாக 2024ஆம் ஆண்டில், பா.ஜ.க, நரேந்திர மோடியை இந்துக்களின் இதய சக்கரவர்த்தியாக முன்னிறுத்தும் என்பது தெளிவாக தெரிகிறது.
இந்த நேரத்தில், இவை அனைத்துக்கும் சில கேள்விகள் எழுகின்றன. நீங்கள் இந்தியாவிற்கு செய்தது என்ன?. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் என்ன ஆனது?. சமூக-பொருளாதார ஏணியின் கீழ்மட்டத்திற்குப் பயனளிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன ஆனது?. ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்குகளிலும் செலுத்தக்கூடிய வருமானம் என்ன ஆனது? இந்துத்துவத்திற்கும், மக்கள் நலனுக்கு இடையே நடக்க இருக்கும் தேர்தலில் இந்த கேள்விகள் விவாதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.