மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் டெல்லி எல்லையில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை நடவடிக்கையும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் உள்ள பிரபலங்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவின் இறையாண்மையைச் சமரசம் செய்ய முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்; ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும். வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்களாக அல்ல' எனக் குறிப்பிட்டுள்ளார்.