”காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அஷோக் கெலாட் வேட்புமனு தாக்கல் செய்வாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. இது தொடர்பாக யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை” காங்கிரஸ் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறியுள்ளார்.
ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்தான அறிக்கையை காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் கட்சியின் மூத்த தலைவர்கள் நேற்று அளித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராஜஸ்தானின் தற்போதைய முதலமைச்சர் அஷோக் கெலாட் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு போட்டியிட்டால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை அஷோக் கெலாடிற்கு ஏற்படும். இந்நிலையில் ராஜஸ்தானின் சூழ்நிலையை ஆய்வு செய்ய காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் அஜய் மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூருக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வு செய்து தயார் செய்த அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் சமர்பித்தனர்.
அந்த அறிக்கையில் ராஜஸ்தானில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கெலாட் மீது தவறு இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அமைச்சர்கள் சாந்தி தாரிவால், பிரதாப்சிங், தர்மேந்திர ரத்தோட் ஆகியோர் 10 நாட்களில் பதிலளிக்க ஒழுங்கு நடவடிக்கை நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. செப் 30 உடன் வேட்புமனு தக்கல் நிறைவு பெறும் நிலையில் வரும் 24 மணிநேரத்திற்குள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என காங்கிரஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸின் தேர்தல் குறித்து தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறுகையில், “திட்டமிட்டபடி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும். வேட்பாளர் படிவத்தை யார் வாங்க வந்தாலும் மனுக்களை வழங்க தயாராக உள்ளோம். அதற்காக தான் நாங்கள் உள்ளோம். இதுவரை சசிதரூர், பவன் பன்சால் என இருவர் மட்டுமே படிவங்களை பெற்றுள்ளனர். அஷோக் கெலாட் வேட்புமனு தாக்கல் செய்வாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. இது தொடர்பாக யாரும் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை” எனக் கூறினார்.