
அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பான ஃபிரீடம் ஹவுஸ் (freedom house) சமீபத்தில் 'உலகில் சுதந்திரம் 2021 - முற்றுகையின் கீழ் ஜனநாயகம்' என அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "நரேந்திர மோடி 2014இல் பிரதமரானதிலிருந்து மனித உரிமைகள் அமைப்புகள் மீது அதிகரித்த அழுத்தம், கல்வியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மிரட்டல் மற்றும் முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட பெரிய அளவிலான தாக்குதல்கள் உள்ளிட்டவையால், நாட்டின் அரசியல் உரிமைகள் மற்றும் சட்ட உரிமைகள் மோசமடைந்துள்ளன" எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டிருந்தது. மேலும் மோடி இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கிச் செலுத்துகிறார் எனவும் கூறிய அந்த அறிக்கை, இந்தியாவின், 'சுதந்திரமான நாடு' என்ற அந்தஸ்தை மாற்றி, 'ஓரளவு சுதந்திரமான நாடு' என்ற அந்தஸ்தை வழங்கியது.
இந்தநிலையில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த வி-டெம் என்ற ஜனநாயகத்தை அளவிடும் நிறுவனம், தனது ஐந்தாவது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியா எதேச்சதிகாரத்தை நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கை இந்திய அரசு, மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறியுள்ளது.
வி-டெம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை:
ஊடகங்கள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் சுதந்திரம் உள்ளிட்டவை பெரிய அளவில் குறைக்கப்பட்டு, இந்தியா எதேச்சதிகார செயல்முறையில் பயணிக்கிறது. மோடிக்கு முன்னர் இந்திய அரசாங்கம் தணிக்கை செய்வதை அரிதாகவே பயன்படுத்தியது. தற்போது இந்த அம்சத்தில், இந்தியா இப்போது பாகிஸ்தானைப் போலவே எதேச்சதிகாரமாகவும், அதன் அண்டை நாடுகளான வங்கதேசம் மற்றும் நேபாளத்தை விட மோசமானதாகவும் உள்ளது.
அரசாங்கம் சிவில் சமூகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது மற்றும் மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பின் உறுதிப்பாட்டிற்கு எதிராகச் செயல்படுகிறது. 2019 இல் திருத்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) அரசியல் எதிரிகளை துன்புறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும், சிறையில் அடைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவை அந்த அமைப்பு உலகின் 'மிகப்பெரிய ஜனநாயகம்' என்ற அந்தஸ்திலிருந்து 'தேர்தல் எதேச்சதிகாரம்' என்ற அந்தஸ்திற்கு தரம் குறைத்துள்ளது. இந்த அறிக்கை, தொடர்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, இந்தியா 'இனி ஜனநாயக நாடக இருக்காது' எனக் கூறியுள்ளார்.