டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் பத்திரம், சத்தீஸ்கர் மேயர் தேர்தல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளுக்குத் தீர்ப்பளித்த இவர், நவம்பர் மாதம் 10ஆம் தேதியன்று ஓய்வு பெற இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமிக்கலாம் என மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கான்ஹேர்சர் என்ற கிராமத்தில் அவருக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. அந்த விழாவில் பங்கேற்று பேசிய சந்திரசூட், “நீதிமன்றங்களில் அடிக்கடி புதிய வழக்குகள் தொடரப்படுகின்றன. ஆனால், பல வழக்குகளில் என்ன முடிவு எடுப்பது? என புரியாத நிலையில் வந்துள்ளது. அத்தகைய வழக்குதான் அயோத்தி ராம் ஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கு. இந்த வழக்கு என் முன் மூன்று மாதங்களாக விசாரணையில் இருந்தது. அப்போது, கடவுள் முன் அமர்ந்து, இதற்கு தீர்வு கிடைக்க வழிகாட்டுமாறு வேண்டினேன். கடவுள் மீது நம்பிக்கையுடன் இருப்பவருக்கு, அவர் நிச்சயம் சிறந்த தீர்வுகளைத் தருவார்”என்றார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு அயோத்தியில் ராமா் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. அதேபோல் அயோத்தியில் வேறொரு இடத்தில் மசூதி கட்டிக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் அமர்வில் டி.ஒய்.சந்திரசூட்டும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.