வெளி நாடுகளுக்கு சென்று வேலை செய்பவர்களுக்கு, அங்கு கொடுக்கப்படும் வேலைகள் மட்டுமே சிரமங்களையும் வலிகளையும் தருவது கிடையாது. மாறாக அவர்கள், தங்களின் பெற்றோரையும், நண்பர்களையும், மனைவி, காதலி உள்ளிட்ட உறவுகளைப் பிரிந்து தனிமையில் வாழ்வதுதான் மிகப்பெரிய வலியாக இருக்கிறது. இவ்வாறு குடும்ப உறவுகளைப் பிரிந்து செல்பவர்கள், இரை தேடிவிட்டு கூடு திரும்பும் பறவை போல சில வருடங்களுக்குப் பிறகு வருவதுண்டு. இவ்வாறு வருபவர்களை, தாயோ, தந்தையோ, காதலியோ, மனைவியோ முதலில் பார்க்கும் போது ஏற்படும் பரவசத்தை வர்ணிக்கவே முடியாது. அதன் உள்ளே அத்தகைய அன்பும், உண்மையும், தவிப்பும், ஆனந்தமும் கலந்து இருக்கும்.
இப்படித்தான், இது போன்ற பாசக் காட்சியைப் பார்க்க கண்கள் இரண்டு போதாது என்று சொல்லும் அளவிற்கு, கர்நாடக மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்புராவிற்கு அருகே உள்ளது கங்கொல்லி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவரது மகன் ரோகித். உள்ளூரில் கிடைக்கும் வேலைகளைப் பார்த்து வந்த ரோகித்திற்கு நீண்டகாலமாக வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அதன்படியே, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்றவருக்கு நல்ல வேலையும் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் வெளிநாடு சென்று அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசையில் இருந்த ரோகித்திற்கு, குடும்பத்தைப் பிரிந்து சென்ற சில மாதங்களிலேயே பிரிவு வாட்டியுள்ளது. ரோகித் சிறு வயது முதலே அம்மாவின் செல்லப்பிள்ளை. ரோகித்திற்கும் அம்மா என்றால் உயிர். துபாயில் வேலை செய்யும் போதெல்லாம் ஓய்வு நேரம் கிடைத்தால், அம்மாவிற்கு போன் செய்து பேசுவதுதான் அவரின் முதல் வேலை. அப்படி பேசினால்தான், ரோகித்திற்கு நிம்மதியாக இருக்கும். ஆனால், இப்படியே மாதங்கள் ஆண்டுகளாகின, ஆண்டுகளும், ஒன்று, இரண்டு, மூன்று என நீண்டுள்ளது. இதற்கு மேல் தனது அம்மாவை பிரிந்திருக்க முடியாது என நினைத்த ரோகித், மூன்று வருடம் முடிந்ததும் தனது ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, அவர் வேலை செய்த நிறுவனமும் அவருக்கு விடுப்பு கொடுத்துள்ளது.
ஆனால் ரோகித்தோ, தான் ஊருக்கு வருவது குறித்து தாய் மற்றும் உறவினர்கள் யாருக்கும் தகவல் கொடுக்காமல், திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து விமானம் மூலம் ரோகித் மங்களூருவுக்கு வந்துள்ளார். அதன் பின்னர், அங்கிருந்து அவரின் வீட்டுக்குச் செல்லாமல், தாய் மீன் வியாபாரம் செய்கின்ற மார்க்கெட்டிற்கு நேராக சென்று திடீரென தனது அம்மாவிற்கு எதிரே நிற்கலாம் என முடிவு செய்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு துணையாக தனது நண்பர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, தாய் சுமித்ரா மீன் வியாபாரம் செய்கின்ற மார்க்கெட்டை நெருங்கியதும், தனது முகம் தெரியாதபடி கைக்குட்டையால் மூடிக்கொண்டு, கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு, தலையில் தொப்பியையும் மாட்டிக்கொண்டு முழுவதும் அடையாளமே தெரியாத அளவிற்கு சென்றுள்ளார். மேலும், தன்னை தனது தாய் எப்படி கண்டுபிடிக்கிறாள் என பார்ப்பதற்காக, உடன் வந்த நண்பனை தூரத்தில் நின்று வீடியோ எடுக்கும்படி கூறியிருக்கிறார்.
பின்னர், சுமித்ராவிற்கு அருகே சென்று மீன் வாங்குவது போல் நின்றுள்ளார். தாய் சுமித்ராவும் கஸ்டமர்தான் யாரோ வந்திருக்கிறார் என மீன்களை எடுத்து வைத்து விலையைக் கூறியிருக்கிறார். உடனே தனக்குப் பிடித்தமான மீனை காண்பித்து விலையைக் கேட்டுள்ளார். அப்போது, அந்தக் குரலைக் கேட்ட சுமிதராவிற்கு தனது மகனின் நினைவு வந்துள்ளது. அதன் பின்னர், சற்று தடுமாற்றமான சுமித்ரா, ஒரு வேளை தனது மகனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அந்த இளைஞரின் முகத்தையே பார்த்துள்ளார். கண்டே பிடிக்கமுடியாத அளவிற்கு முகத்தை மறைத்திருந்தாலும், தனது தாய் கண்டுபிடித்து விட்டாலே என நினைத்து லேசாக ரோகித் சிரித்ததும் திடீரென, அவரின் முகத்தில் இருந்த கைக்குட்டையை நீக்கியுள்ளார் சுமித்ரா. கைக்குட்டையை நீக்கியவருக்கு இன்ப அதிர்ச்சி. பொசுக்கென கண்களில் திரண்டு வந்தக் கண்ணீரோடு மூன்று ஆண்டுகளாக பிரிந்திருந்த தனது மகனை ஆரத்தழுவிக்கொண்டு முத்தமிட்டுள்ளார். மகனும் தாயின் பாச அணைப்பில் தழுதழுத்துள்ளார்.
இதற்கிடையே, இந்தத் தாயின் பாசக்காட்சியை தனது செல்போனில் வீடியோ எடுத்த ரோகித்தின் நண்பர், தாய் பாசத்திற்கு இணை எதுவுமே இல்லை என கூறி இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும், அம்மாவின் அன்பிற்கு மேல் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என கருத்து தெரிவித்து அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். தற்போது இணையதளத்தில் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
- அருள்