Published on 08/12/2019 | Edited on 08/12/2019
வார இறுதி நாள்களில் ஆய்வு மேற்கொள்ளும் கிரண்பேடி கடந்த இரு வாரங்களாக காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் படி நேற்று கோரிமேடு காவலர் சமுதாய கூடத்தில் கிரண்பேடி காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
![Kiranbedi-Puducherry-police](http://image.nakkheeran.in/cdn/farfuture/3ijXjD602WkxwwAY87_cRjFaKafizdObOUi96lGg574/1575797544/sites/default/files/inline-images/11_54.jpg)
அப்போது பேசிய கிரண்பேடி, "ரோந்து பகுதியில் உள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். வேறு பகுதிக்கு சென்றாலும், அப்பகுதி ரோந்து போலீசாரிடம் ரவுடிகள் குறித்த தகவல்களை பரிமாற வேண்டும். குற்றத்தில் ஈடுப்பட்டு சிறை சென்று திரும்பியவர்களுக்கு பின்புலமாக யார் உள்ளனர் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் குறித்த தகவல்களை அருகில் உள்ள போலீஸ் நிலைய பீட் அதிகாரியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவர்கள், குற்ற செயல்களில் ஈடுபடலாம். அவர்களை அடையாளம் கண்டு தொழிற்பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யலாம். புதுச்சேரியில் நில அபகரிப்பு மோசடி அதிக அளவில் நடக்கிறது. இதனை சிலர் தொழிலாகவே செய்து வருகின்றனர். பிள்ளைகள் இல்லாத முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களின் சொத்துக்களை அபகரிப்பதாக புகார்கள் வருகின்றன. அத்தகைய புகார்கள் வந்தால் அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிந்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நில அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
![Kiranbedi-Puducherry-police](http://image.nakkheeran.in/cdn/farfuture/VzsJMfowXM0kpTeiVKS664HvLQdJwvA8PHLamFheHCI/1575797572/sites/default/files/inline-images/2_113.jpg)
இதேபோல் கிழக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் ஆய்வினை மேற்கொண்ட கிரண்பேடி "போக்குவரத்து போலீசாரும் ரோந்து செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து உயர் அதிகாரிகளுக்கு தெரிய படுத்த வேண்டும். பணியிலிருக்கும் போது தவிர்க்க முடியாத அவசரம் என்றாலொழிய மற்ற நேரங்களில், சிக்னல்களில், போக்குவரத்து நெருக்கடியான பகுதிகளில் பணியாற்றும் போது செல்போன்களை பயன்படுத்த கூடாது. எப்போதும் செல்போன்களில் மூழ்கி இருக்க கூடாது" என்று தெரிவித்தார்.