‘பேர்டு ஃப்ளு’ எனப்படுகிற பறவைக் காய்ச்சல், கேரளாவில் வாத்துகள் மூலமாகப் பரவி கோழிகளையும் தொற்றியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
கேரள கால்நடைத் துறையினரின் துரித நடவடிக்கையால் குட்டநாடு, ஆலப்புழா, கோட்டயம், கைப்புழம் உட்பட பல ஏரியாக்களில் வாத்துகள் மற்றும் கோழிகள் 40 ஆயிரத்திற்கும் அதிகமானவை அழிக்கப்பட்டுள்ளன. மேலும் அழிப்புப் பணிகள் தொடர்கின்றன. இதன் காரணமாக பேரிழப்பைச் சந்தித்திருக்கும் பண்ணை உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை அறிவித்திருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.
மேலும், பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் கேரள மாநிலக் கால்நடைத் துறையின் அதிகாரிகள், “இங்கே கறிக்கோழிகள் தயாரிப்பு, பராமரிப்பு கிடையாது. இங்கு உணவுத் தேவையான சிக்கன்களுக்கு தமிழகத்திலிருந்துதான் கறிக்கோழிகள் அன்றாடம் 15 லாரி லோடுகள் வருகின்றன. கேரளாவில் பறவைக் காய்ச்சலின் எதிரொலியாய் கோழிகளின் வரத்து தினமும் 5 லோடுகளுக்கும் கீழான அளவில் சரிந்துவிட்டன” என்கின்றனர். மேலும் கொண்டுவரப்படும் கோழிகள், நோயின்மை என்கிற கால்நடைத் துறையின் சான்றிதழுடன் வர வேண்டும் என்று உத்தரவாகியிருக்கிறது என்கிறார்கள்.
இதனிடையே தமிழகத்தின் புளியரை சோதனைச் சாவடிகளை ஆய்வுசெய்த தென்காசி கலெக்டரான டாக்டர் சமீரன், “பறவைக் காய்ச்சல் தடுப்பின் பொருட்டு கேரளாவிலிருந்து வரும் லாரிகள் சோதனைச் சாவடியில் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. அங்கிருந்து வரும் கோழித் தீவனங்கள், வாத்து முட்டைகள், கோழிக் கழிவுகள் உள்ள லாரிகள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. கேரளாவிலிருந்து வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன. இதனைக் கண்காணிக்க கால்நடைத்துறையினர் 24 மணி நேரமும் பணியிலிருப்பார்கள்” என்றார்.