Skip to main content

சக்கர நாற்காலியில் பிரச்சாரம் - மம்தா அதிரடி!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

mamata banerjee

 

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி, எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜிக்கும், பாஜகவிற்கு இடையே நேரடியான போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலையொட்டி மம்தா, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் நேற்று (10.03.2021) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 

இந்தநிலையில் நேற்று மாலை, போலீஸார் அருகில் இல்லாதபோது தன்மீது சிலர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டினார். தாக்குதலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து வலியால் துடித்த அவர், ‘இது ஒரு திட்டமிடப்பட்ட சதி’ எனக் குற்றஞ்சாட்டினார். இதன்பிறகு மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மம்தாவின் கால், கை, கழுத்துப் பகுதி எலும்புகளில் பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் 48 மணிநேரத்திற்கு கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக, மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

இந்தநிலையில் மம்தா பானர்ஜி பேசும் வீடியோ ஓன்று வெளியாகிவுள்ளது. அதில் சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரச்சாரம் செய்வேன் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து வீடியோவில் அவர், அமைதியாக இருக்குமாறும், கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறும், மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம் எனவும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என் கை, காலில் காயம் ஏற்பட்டது உண்மைதான். தசைநாரிலும் காயங்கள் உள்ளது. எனக்கு இதய வலியும் ஏற்பட்டது. இரண்டு மூன்று நாட்களில் திரும்பி வருவேன். எனது காலில் ஏற்பட்ட காயம் ஒரு பிரச்சினையாகவே இருக்குமென்றாலும், அதை நான் பார்த்துக்கொள்வேன். அது எனது (பிரச்சார) கூட்டங்களைப் பாதிக்க விடமாட்டேன். ஆனால், நான் சக்கர நாற்காலியில் சுற்ற வேண்டியிருக்கும், அதற்கு உங்கள் ஆதரவு எனக்குத் தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்