உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் 2 திட்டத்தின் முக்கிய நிகழ்வான, 'விக்ரம் லேண்டர்' தரையிறங்கும் நிகழ்வின்போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது.
பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேகமாக சென்று லேண்டர் நிலவின் தரையில் மோதியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். விக்ரம் லேண்டர் தரையிறக்கம் தோல்வியடைந்தாலும், நிலவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆர்பிட்டர் வெற்றிகரமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டது. அந்த ஆய்வுகளில், நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 வாயுவின் மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டரில் உள்ள சேஸ் 2 என்ற கருவி கண்டறிந்தது.
இந்நிலையில் தற்போது நிலவினுடைய நிலப்பரப்பின் முப்பரிமாண தகவல்களை ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது. ஆர்பிட்டரில் உள்ள டி.எம்.சி 2 என்ற டெரைன் கேமரா நிலவின் நிலப்பரப்பு முழுவதையும் தெளிவாக படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தில் நிலவின் மேற்பரப்பில் உள்ள மேடு மற்றும் பள்ளங்கள் தெளிவாக பதிவாகியுள்ளன.