2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதிலிருந்தே அத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தச்சூழலில் மம்தாவின் அதிரடி நடவடிக்கைகளால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மம்தாவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சிவனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதனால் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டது.
இந்தநிலையில் தெலங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்றுதிரட்டி மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேவேளையில் காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி இல்லை எனத் தெரிவித்த சிவசேனாவும் தற்போது மூன்றாவது அணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்தநிலையில் கடந்த புதன்கிழமை, உத்தவ் தாக்கரேவும் சந்திரசேகர ராவும் தொலைப்பேசியில் உரையாடினர். உத்தவ் தாக்கரே, சந்திரசேகர ராவை மும்பைக்கு அழைத்ததோடு, பாஜகவுக்கு எதிரான அவரது நாடு தழுவிய போராட்டத்தில் முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து மும்பை சென்ற சந்திரசேகர ராவ், உத்தவ் தாக்கரேவையும், மஹாராஷ்ட்ரா அமைச்சர்களையும் உத்தவ் தாக்கரேவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது நடிகர் பிரகாஷ் ராஜும் இருந்துள்ளார். உத்தவ் தாக்கரேவும் சந்திரசேகர ராவும் பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளை எப்படி ஒன்று திரட்டுவது குறித்து ஆலோசிப்பார்கள் எனக் கருதப்படுகிறது.