அடுத்த ஆண்டு நடக்கவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சியினர் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அதில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கித் தேர்தல் பணியில் ஈடுபட்டு தங்களுக்கான ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். மேலும், அடுத்த மாதம் தெலுங்கானா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி எம்.பி. ராகுல் சத்தா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா உள்ளிட்டோரின் கைப்பேசிகளுக்கு, “உங்கள் ஆப்பிள் கைப்பேசி அரசு உதவிபெறும் அமைப்பால் தாக்குதல் நடத்தக்கூடும். அவ்வாறு உங்கள் கைப்பேசி தாக்குதலுக்கு உள்ளானால், கைப்பேசியில் உள்ள முக்கிய தரவுகள் திருடப்படலாம். உங்கள் கைப்பேசியின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களைக் கூட அவர்களால் அணுக முடியும்” என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்பதாகக் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்களது செல்போனை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “கிட்டத்தட்ட 150 நாடுகளில் உள்ள தனி நபர்களின் செல்போன்களுக்கு அச்சுறுத்தல் அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆப்பிள் அச்சுறுத்தல் அறிவிப்புகள் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம். அல்லது, சில தாக்குதல்கள் கண்டறியப்படாமல் இருக்கலாம். அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை. ஏனென்றால் எதிர்காலத்தில் இதுபோன்று தாக்குதல் நடத்துபவர்களின் நடத்தையை மாற்றி அமைக்க உதவும்.” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாகக் கூறப்படும் குறுந்தகவல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “எச்சரிக்கை குறுந்தகவல் வந்தவர்கள் அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அச்சுறுத்தல் நுண்ணறிவு சிக்னல்கள் அடிப்படையில் இந்த எச்சரிக்கை குறுந்தகவல் வந்ததாகவும் இது அடிக்கடி தவறானதாகவும், முழுமையற்றதாகவும் இருக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இது போன்ற குறுந்தகவல் வந்துள்ளதாகவும்” தெரிவித்தார்.