ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் புதிதாக ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டுமென டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் இன்று (20/12/2021) நேரில் ஆஜராக கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடந்த நவம்பர் 27- ஆம் தேதி அன்று நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது, நீதிபதி எம்.கே.நாக்பால் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட முன்ஜாமீனை ஏற்க முடியாது எனக் கூறினார். இருவரும் புதிதாக ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர், இவ்வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 15- ஆம் தேதிக்கு ஒத்திவைக்க முற்பட்டார். அப்போது பொங்கல் பண்டிகையின் காரணமாக, வழக்கு விசாரணையை மேலும் தள்ளி வைக்குமாறு கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதனையேற்ற நீதிபதி, ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 20- ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.