மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த 7 மாதங்களாக இடைவிடாத போராட்டத்தை நடத்திவருகின்றனர். மத்திய அரசுடனான பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியே விவசாயிகள் போராட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு டெல்லி காவல்துறையினர் அனுமதி தரவில்லை. கரோனாவை காரணம் காட்டி காவல்துறை அதற்கு அனுமதி மறுத்திருந்தது. இந்நிலையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டெல்லி ஜந்தமந்தருக்கு மாற்றியுள்ளனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி இன்றுமுதல் (22.07.2021) தினந்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.