சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் டெல்லி காவல்துறை முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 5ஆம் தேதி தொடங்கின. இந்தத் தேர்வுகளின் போது 10ஆம் வகுப்பு கணிதவியல் மற்றும் 12ஆம் வகுப்பு பொருளியல் பாடங்களுக்கான கேள்வித்தாள்கள் லீக் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இந்த செய்தியை சி.பி.எஸ்.இ. திட்டவட்டமாக மறுத்தாலும், இறுதியில் அந்த இரண்டு பாடங்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. மேலும், மறுதேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த கேள்வித்தாள் லீக் ஆன விவகாரத்தில் தொடர்புடையவர்களை டெல்லி காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரிடத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஒரு தனியார் பயிற்சி நிலைய உரிமையாளர் மற்றும் இரண்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிசப் மற்றும் ரோகித் ஆகியோர் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். தவுகீர் என்பவர் பவானா பகுதியில் பயிற்சி நிலையம் நடத்திவருகிறார். தேர்வு தொடங்க அரை மணிநேரம் இருந்தபோது தவுகீர் வாட்ஸ் அப் மூலமாக கேள்வித்தாளை லீக் செய்துள்ளார். டெல்லியின் கர்கர்டூமா நீதிமன்றம் இம்மூவரையும் இரண்டு நாள் காவல்துறை கட்டுப்பாட்டில் கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.