
பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (18/02/2022) மாலையுடன் ஓய்ந்தது.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 20- ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (18/12/2022) மாலையுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
117 சட்டமன்றத் தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 93 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். வரும் பிப்ரவரி 20- ஆம் தேதி அன்று காலை 08.00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 06.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பக்வந்த் மான், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவஜோத்சிங் சித்து, முன்னாள் முதலமைச்சர்கள் அமரீந்தர் சிங், பிரகாஷ் சிங் பாதல், சிரோன் மணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், தொங்கு சட்டமன்றமே அமையும் என்றும் தெரிவிக்கின்றனர். அதேசமயம், ஆம் ஆத்மி கட்சி அதிக சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ், பா.ஜ.க.வைப் பின்னுக்கு தள்ளி கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சி செய்யும் என்றும் கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.