சீன பிராண்டுகளின் விளம்பரங்களில் பிரபலங்கள் யாரும் நடிக்க வேண்டாம் என அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய, சீன எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான கருத்துகள் இந்தியாவில் அதிக அளவில் எழுந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சீன பொருட்களைப் பயன்படுத்துவதை இந்தியர்கள் தவிர்க்கவேண்டும் எனவும், சீனப் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும் சமூகவலைத்தளங்களில் கருத்துகள் எழுந்து வருகின்றன. மேலும், மக்கள் அனைவரும் இந்திய தயாரிப்புகளை வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கருத்து எழ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சீன பிராண்டுகளின் விளம்பரங்களில் பிரபலங்கள் யாரும் நடிக்க வேண்டாம் என அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்த அந்த அமைப்பின் அறிக்கையில், "இக்கட்டான இச்சமயத்தில் சீனப் பொருள்களின் விளம்பரங்களில் திரைத்துறை மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்கள் நடிக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கிறோம். இந்திய ராணுவத்தினரின் தியாகத்துக்கு மரியாதை தரும் விதமாக ஆமிர் கான், விராட் கோலி, தீபிகா படுகோன், கத்ரினா கயிப், ரன்பிர் கபூர், ரன்வீர் சிங், சல்மான் கான் என சீனப் பொருள்களின் விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறோம். அதேபோல சீனப் பொருள்களை வாங்கக்கூடாது, விற்பனை செய்யக் கூடாது என்கிற பிரசாரத்தை முன்வைக்க சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், தோனி போன்ற பிரபலங்கள் உதவ முன்வர வேண்டும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.