நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்திக்கு எதிராக பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலி சதர் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ அதிதி சிங். மறைந்த மூத்த அரசியல்வாதியான அகிலேஷ் சிங்கின் மகளான அதிதி சிங், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து, அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்தார். அதன் பிறகு, ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், அதிதி சிங் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மக்களவைத் தேர்தலில் சீட் வேண்டுமென்றால், என்னை பற்றியும், எனது குணத்தை பற்றியும் தவறாகப் பேசும்படி என்னுடைய முன்னாள் கணவரிடம் பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்” என்று கூறி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.