Skip to main content

20 முறை பயணம்; 26 மணி நேரப் பேரணி.. எல்லாம் வீண்! தோல்வியில் வீழ்ந்த பாஜக!

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

BJP lost to Congress in Karnataka assembly elections

 

இந்தியாவே எதிர்பார்த்திருந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகளின் மொத்த பார்வையும் கர்நாடகத் தேர்தலை நோக்கியே இருந்தது. இதன் காரணமாகத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், இழந்த ஆட்சியை மீட்டெடுக்கக் காங்கிரஸும் வியூகம் வகுத்தன. சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரதமர் மோடி, அமித்ஷா என இரு கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

 

தென்னிந்தியாவில் பாஜக வசம் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடக என்பதால், பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஏராளமான வாக்குறுதிகளையும் அள்ளி வீசியது. மற்ற மாநில பாஜக முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என அடுத்தடுத்து முக்கிய புள்ளிகளை இறக்கி பிரச்சாரம் செய்தது பாஜக தலைமை.  இப்படியாக பாஜகவின் வியூகம் இருக்க, ஒற்றுமை பயணத்தின் சூடு குறையாமல் கர்நாடகாவே கதியெனக் கிடந்த ராகுல், கிடக்கிற கேப்பில் எல்லாம் ஸ்கோர் செய்துகொண்டிருந்தார். கல்லூரி மாணவர்களுடன் உரையாடல், டெலிவரி பாயுடன் சாப்பாடு என அடுத்தடுத்து கர்நாடக மாநில மக்களின் செல்பி நாயகனாகவே மாறிப்போனார். 

 

பிரதமர் மோடியோ இந்தத் தேர்தலுக்காக 20 முறைக்கும் மேல் பிரச்சாரத்திற்காகக் கர்நாடகா வந்திருந்தார். பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தின் போது, பெங்களூருவில் உள்ள கோன குண்டே சோமேஷ்வரா கோயிலில் சிறப்புப் பூஜை செய்து வழிபாடு செய்து, மைசூரு தலைப்பாகை அணிந்து, காவி நிறத்திலான பிரச்சார வாகனத்தில் பிரதமர் மோடி நின்றவாறு சாலை பேரணி மேற்கொண்டார். 26 கிமீ தூரம் திறந்த வாகனத்தில் நின்றவாறு பயணித்து பிரதமர் மோடி 13 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்தார். 

 

இப்படியாக இருகட்சிகளின் பிரச்சாரங்கள் முடிந்து, கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு இன்று (13ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் ஒரு மணிநேரத்தில் பாஜகவும், காங்கிரஸும் சம பலத்துடன் இருந்த நிலையில், அடுத்தடுத்து அனைத்து தொகுதிகளிலும், பாஜகவை பின்னுக்குத் தள்ளி ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை தொகுதிக்கும் மேல் முன்னிலை வகித்தது. குறிப்பாக பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த 15 பேர் தங்களது தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளனர். மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கர்நாடக பாஜகவின் தலைவர் எடியூரப்பாவும், முதல்வருமான பசவராஜ் பொம்மையும் தங்கள் தோல்விகளை ஒப்புக்கொண்டுள்ளனர்.  இப்படி பாஜகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும், பிரச்சாரம் செய்தும், பிரதமரின் சாலை பிரச்சாரம் கூட எடுபடாமல் போனது பாஜக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஆந்திர மாநில மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்” - செல்வப்பெருந்தகை ஆவேசம்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
People of Andhra State will never forgive

ஆந்திராவில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் அம்மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைக்கு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நேற்று (29.062024) தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமது இளமைப்பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி, நம்பிக்கை பெற்று சோனியா காந்தியின் ஆதரவோடு அம்மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாக பணியாற்றியவர் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. அம்மாநிலத்தில் பரவியிருந்த பிற்போக்கு சீர்குலைவு சக்திகளை முறியடித்து, ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர். இவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பேரிழப்பு. அத்தகைய வலிமையான தலைமையை இழந்ததனால்தான் இன்றைக்கு மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் இரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

People of Andhra State will never forgive

ஒன்றுபட்ட ஆந்திராவின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலையைத் தீ வைத்துச் சேதப்படுத்தியிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒட்டுமொத்த ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மறைந்த தலைவரை இழிவுபடுத்துகிற வகையில் அவரது சிலையைச் சேதப்படுத்தியதை விட நன்றி கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட செயலை செய்தவர்கள் எவராக இருந்தாலும் ஆந்திர மாநில மக்கள் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

நீட் தேர்வு முறைகேடு - நாடாளுமன்றத்தில் அமளி!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
NEET examination malpractice - Parliament adjourned

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

NEET examination malpractice - Parliament adjourned

இத்தகைய சூழலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை எம்பி சு. வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்திருந்தார். அதே போன்று நீட், யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை அளித்தார். அதோடு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தார். மேலும் நீட் மற்றும் யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்திருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் கோரிக்கை வைத்தனர். இதனை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். அப்போது ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்பிகளின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, சபாநாயகருக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நண்பகல் 12 மணி வரை மக்களவையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

NEET examination malpractice - Parliament adjourned

முன்னதாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். அதற்கு ராகுல் காந்தி  நீட் தேர்வு தொடர்பான முறைகேடு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். இதே போன்று மாநிலங்களவையிலும் மல்லிகார்ஜுன கார்கே நீட் தேர்வு விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் எழுப்பி, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். இதனால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.