தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று மாலை புயலாக மாறியது. முன்னதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருமாறினால் அதற்கு ‘பிப்பர்ஜாய் புயல்’ எனப் பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதே போல் புயலுக்கு ‘பிப்பர்ஜாய் புயல்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்க தேசம் பரிந்துரைத்துள்ள இந்த புயலுக்கு தமிழில் ‘ஆபத்து’ என்று பொருள்.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நேற்று (06.06.2023) காலை 08:30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாலை 11:30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மாலை 05:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் "பிப்பர்ஜாய்" புயலாக மேலும் வலுவடைந்தது.
இது வடக்கு திசையில் நகர்ந்து இன்று (07.06.2023) காலை 05:30 மணி அளவில் தீவிரப் புயலாக வலுப்பெற்று, காலை 08:30 மணி அளவில் கோவாவில் இருந்து மேற்கு - தென்மேற்கே சுமார் 880 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 990 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, அதன் பிறகு வடக்கு - வடமேற்கு திசையில் அதற்கடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.