ஐக்கிய ஜனதா தள எம்.ஏல்.ஏ. கோபால் மண்டல் பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு கையில் துப்பாக்கியுடன் சென்றது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில், நிதிஷ் குமார் தலைமையிலான (ஐக்கிய ஜனதா தளம்) ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியின் எம்.ஏல்.ஏ. கோபால் மண்டல் தனது பேத்தியுடன் பாட்னா, பகல்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு செவ்வாய் மாலை சென்றுள்ளார். அப்போது ஆயுதமேந்திய அவரது பாதுகாவலர்களுடன், கோபாலும் கையில் ரிவால்வர் துப்பாக்கியுடன் மருத்துவமனைக்கு செல்ல சற்று பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் தெரிவித்ததாவது, ‘என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், ஆயுதத்தை கையில் வைத்திருக்கிறேன்’ என எம்.எல்.ஏ. கூறினார் என்றனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பகல்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் கூறுகையில், “கோபால் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியைத் தான் எடுத்து வந்தார். இதனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. ஒருவேளை, எம்.எல்.ஏ. குறித்து யாரேனும் புகாரளிக்க போலீசை அணுகினால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். இருப்பினும், மாநகர துணைக் காவல் அதிகாரியிடம் விசாரணை நடத்த கேட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
இதனால், ஐக்கிய ஜனதா தள எம்.ஏல்.ஏ. கோபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநிலத்தின் பா.ஜ.க.வினர் சார்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.