டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சாதித்தது என்ன? என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துள்ள தொழில் வளர்ச்சியை வியந்து பாராட்டிய உலக நாடுகள் என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த சர்வதேச அரங்கில் புகழ்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum WEF2025) தமிழ்நாடு தனி முத்திரையைப் பதித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எவரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த மூன்றாண்டுகளாக அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சரும், துறை சார்ந்த அதிகாரிகள் வல்லுநர் குழுவும் தொடர்ந்து பங்கேற்று, மாநிலத்தின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் என்பது முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போடுவதற்கான அரங்கமல்ல.
இதை அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேச முதலமைச்சரும் தெளிவாக விரிவாக, பொருளாதார அறிவாற்றல் உள்ள அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெரிவித்திருக்கிறார். உலகளாவிய தொழில் வளர்ச்சி எந்தத் திசையில் பயணிக்கிறது, அதற்ககேற்ப உலகில் உள்ள நாடுகள் தமது தொழிற்கொள்கைகளை எப்படி வகுத்துள்ளன, அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்தெந்த துறையில் முதலீடுகள் பெருகும் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளவும். பரிமாறக்கொள்ளவுமான உலக நாடுகளின் சந்திப்பு மையம்தான் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு அரசின் சார்பில் அதில் பங்கேற்று, உலக நாடுகளில் எவற்றுடன் தொழிற்கட்டமைப்பை மேம்படுத்தலாம் என்பதற்கான சந்திப்புகள், புதிய நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பான் விளக்கங்கள் ஆகியவற்றை முன்னெடுக்கும் அருமையான வாய்ப்பு அமைந்தது.
கடந்த மே 2021 முதல் மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முன்னெடுத்த தொழிற்கொள்கையாலும், முதலீட்டாளர் சந்திப்புகள், உலக முதலீட்டாளர் மாநாடு ஆகியவற்றாலும் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்களுடன் 893 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதன் விளைவாக 10,07,974 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்ப்பதற்கான வாய்ப்புகளும் 19.17,917 நேரடி வேலைவாய்ப்புகளுடன் 31,53,862 மொத்த வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான சூழலை அமைத்து, தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட முறையில் பல தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்பை வழங்கி, உற்பத்தியைத் தொடங்கியிருப்பது குறித்த விவரங்களை டாவோஸில் சந்தித்த உலக நாடுகளின் நிறுவனங்களிடம் விளக்கி, அவர்களைத் தமிழ்நாட்டில் தொழில்தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடந்துள்ளன.
'டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன?' என கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது? என்பதை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Econmic advisary council report to pm report EAC-PM) அறிக்கையை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறிந்து கொள்ளாமல் அற்பதனமாக அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 1960-61ல் 8.7 சதவிகிதமாக இருந்தது. அது 2023 2024 ல் 8.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தனி நபர் வருவாயைப் பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் சராசரி 2023-2024-ல் 171.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும் 2023-24-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30 சதவிகித பங்கினை கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது. உலக நாடுகள் வியக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்கட்டமைப்பும், பெண்களின் பங்களிப்பும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், மாநிலத்தின் மீது எவ்வித அக்கறையுமில்லாமல் வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ 'கிண்டி'த் தருவதை ஆளுநரும் எதிர்க்கட்சித் தலைவரும் மென்று கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.