Skip to main content

நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல்!: புதிய பிரச்சனையைக் கிளப்பும் எதிர்க்கட்சிகள்

Published on 08/08/2017 | Edited on 08/08/2017
நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல்!: புதிய பிரச்சனையைக் கிளப்பும் எதிர்க்கட்சிகள்

கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நாடு முழுவதும் ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளின் மதிப்பு செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதன்பின்னர் சில வாரங்கள் கழித்து புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு அவை புழக்கத்தில் விடப்பட்டன.


 
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த கூட்டத்தொடரைப் போல எதிர்க்கட்சி சார்பில் ஜி‌எஸ்‌டி உட்பட பல்வேறு பிரச்சனைகளின் மீதான கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இன்று ராஜ்யசபையின் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.500 நோட்டுகள் இரண்டைக்காட்டி, அவை வெவ்வேறான அளவுகளில் இருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தார். 

அதைத்தொடந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் டெரிக் ஓ பிரைன்  தன்னிடம் இருந்த ரூ.500 நோட்டைக் காண்பித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினார். ஜனதா கட்சியைச் சேர்ந்த சரத் யாதவும் தன்னிடம் உள்ள இரண்டு ரூ.500 நோட்டுகள் வெவ்வேறு அளவில் இருப்பதை அவையில் காண்பித்தார். இதற்கிடையில் குலாம்நபி ஆசாத், ‘இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல்’ எனக் குறிப்பிட்டு பேசினார். 



இதுகுறித்து தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நிதி அமைச்சர் அவையில் இருப்பதால் அவரை பதில் அளிக்க திரிணாமூல் உறுப்பினர் ஓ பிரைன் கோரினார். இதைத் தொடர்ந்து பேசிய அருண் ஜேட்லி இதைப்போன்று அவையில் பேசுவதற்கு, ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ அதாவது முன் கூட்டியே அனுமதி வாங்கி இருக்க வேண்டும் என்று பலமுறை தொடர்ந்து கூறிவந்தார். மாநிலங்களவைத் துணைத்தலைவர் குரியன் தலையிட்டு, இதுகுறித்து பேச பாயிண்ட் ஆப் ஆர்டர் தாண்டி தனியாக நோட்டீஸ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றார். அதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமோத் திவாரி தனியாக நோட்டீஸ் அளிக்கபட்டது என்று கூறியபின், அதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
 
இந்த விவகாரம் தொடர்ந்து எழுப்பப்பட்டால், மீண்டும் ஒரு பெரிய விவாதம் மேற்கொள்ள எதிர்க்கட்சியினர் முடிவு செய்திருப்பது போன்றே தெரிகிறது.

- சி.ஜீவா பாரதி    

சார்ந்த செய்திகள்