இந்தியாவில் இதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தவிர ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசிகளுக்கும், ஸைடஸ் கடிலா நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் இந்தியாவில் இதுவரை அவசரகால அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் சில கரோனா தடுப்பூசிகள் சோதனை கட்டத்தில் உள்ளன. இந்தநிலையில் ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனம், புரோட்டீனை அடிப்படையாகக் கொண்ட கரோனா தடுப்பூசி ஒன்றைத் தயாரித்து வருகிறது. கடந்த வருடத்திலிருந்து இந்த கரோனா தடுப்பூசியின் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில், அண்மையில் ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனம், தங்களது தடுப்பூசியை மனிதர்கள் மீது முதல்கட்டமாக சோதனை நடத்த அனுமதி கேட்டு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்தது.
இந்தநிலையில் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் நிபுணர் குழு, மனிதர்கள் மீது முதல்கட்டமாக இத்தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு விண்ணப்பித்துள்ளது. இதனையடுத்து தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் மனிதர்கள் மீதான ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ் நிறுவன தடுப்பூசியின் முதல் கட்ட சோதனைக்கு விரைவில் அனுமதியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனம், தங்களது கரோனா தடுப்பூசியை அடுத்தாண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.