மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமூல் கட்சி, அறுதிப் பெரும்பான்மையுடன் அரியணை ஏறியது. மம்தா, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ளார்.
இதற்கிடையே மேற்குவங்கத்தில் நடைபெற்ற நான்காம் கட்ட வாக்குப்பதிவின்போது கூச் பெஹார் மாவட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததது. இதில் நான்கு பேர் மத்திய பாதுகாப்பு படைவீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பாக ஒருவரும் கொல்லப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பாஜகவை குற்றஞ்சாட்டிய மம்தா, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அவர், ஐந்து பேர் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இந்தச் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, நேரில் ஆஜராகுமாறு 6 மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு, மேற்குவங்க குற்றப் புலனாய்வுத்துறை அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேநேரத்தில், அரசியல் காரணத்திற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மத்திய தொழிற்பாதுகாப்பு படைக்கு நோட்டீஸ் அனுப்ப மாநில குற்றப்பிரிவுக்கு அதிகாரமில்லை எனவும் மேற்குவங்க பாஜக கூறியுள்ளது.