தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா, தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணம் என கருதப்படுகிறது.
இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 54 பெருக்கும், டெல்லியில் 22 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், "இங்கிலாந்தில் கரோனா பரவும் அளவைப் பார்க்கையில், இந்தியாவிலும் அதேபோன்ற பரவல் ஏற்பட்டால், நமது மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பாதிப்புகள் பதிவாகும்" என எச்சரித்தார்.
இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, எந்த சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "ஒமிக்ரானை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். பிரிட்டனில் இருப்பதுபோல் நிலைமை மோசமாக இருக்காது என நம்புவோம். ஒமிக்ரான் குறித்து கூடுதல் தரவுகள் நமக்குத் தேவை. உலகின் பிற பகுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்கும்போதெல்லாம், நாம் அதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். அதோடு எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருக்க வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஆபத்தில் சிக்கிக்கொள்வதைவிட, ஒமிக்ரானை எதிர்கொள்ள தயாராக இருப்பது நல்லது" என தெரிவித்துள்ளார்.