ரூ.2 லட்சம் மதிப்புள்ள மின்கம்பங்களை திருடியவருக்கு ஜாமீன் வழங்கி, 200 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனாஸ் ஆதி. மின்சாரம் வழங்கும் நிறுவனத்தில் இருந்து ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள ஆறு மின் கம்பங்களைத் திருடியதாகக் கூறி, கடந்தாண்டு டிசம்பர் 25ஆம் தேதி மனாஸ் ஆதியை, ஒடிசா போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனாஸ் ஆதி ஒடிசா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கே.பாணிக்ராஹி, அந்த மனுவை ஏற்று மனாஸ் ஆதிக்கு ஜாமீன் வழங்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் நோக்கில் பல நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டார்.
அதில், கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மா, வேம்பு, புளி உள்ளிட்ட 200 மரக்கன்றுகளை நட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவற்றை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.