Skip to main content

லஞ்ச வழக்கில் சிக்கும் அமலாக்கத்துறை உதவி இயக்குநர்?

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

Assistant Director of Enforcement Department caught in bribery case?

 

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க மதுபான தொழிலதிபர் அமன்தீப் தாலிடம் இருந்து ரூ. 5 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பவன் கத்ரி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மதுபான தொழிலதிபர் அமன்தீப் தால் என்பவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது வழக்கில் இடையூறு ஏற்படுத்த மூத்த அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி துறையில் லஞ்ச பரிமாற்றங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கலால் வரிக் கொள்கை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து அமன்தீப் தாலின் பெயரை நீக்கியதற்காக, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பவன் கத்ரிக்கு முன்பணமாக ரூ. 50 லட்சம் கொடுத்ததாக பிரவீன் குமார் வட்ஸ் வாக்குமூலம் அளித்திருந்தார். 

 

இதன் பேரில், அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் மதுபான தொழிலதிபர் அமன்தீப் தால், கலால் கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ரூ. 5 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதாகத் தெரியவந்தது. அதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் அமன்தீப் தால் கைது செய்யப்பட்டார்.

 

இது குறித்து கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ. 2.19 கோடி மற்றும் வழக்கின் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில், அமலாக்கத்துறை அளித்த புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 120-பி (குற்றவியல் சதி) பிரிவின் கீழ் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பவன் கத்ரி மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

மேலும், இந்த வழக்கில் மதுபான தொழிலதிபர் அமன்தீப் தால், அவரது தந்தை பிரேந்தெர் சிங், அலுவலக எழுத்தாளர் நிதீஷ் கோஹர், பட்டயக் கணக்காளர்  பிரவீன் குமார் வட்ஸ், ஏர் இந்தியாவின் உதவி பொது மேலாளர் தீபக் சங்வான் ஆகியோர் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குப் பதிவை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்புடைய 6 இடங்களில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்